Tuesday, 26 April 2016

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவது எப்படி ?


தயாராவது எப்படி ? 

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.

தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம். அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும். மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம்.

பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம். இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு, சைவமும் வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. வெற்றி பெற வாழ்த்துகள்.

==============================================================

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?




தமிழ்வழியில் படித்து தேர்வெழுதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த ஜெ. பார்த்திபன்
அளிக்கும் டிப்ஸ்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஒன் தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப்போல் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அடுத்ததாக நேர்முகத் தேர்வு. இந்த மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும். முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.
முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1:20 என்ற விகிதத்தில் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 61. முதல்நிலைத் தேர்வை 90 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 1300 மாணவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை 1: 10 என்ற விகிதத்தில் மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு (ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதம்) தேர்வு செய்வார்கள். மொத்தம் 61 பதவிக்கு 610 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் சிறப்பாக பதில் அளிக்கும் 61 பேருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் அளிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரைவடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, கரண்ட் அஃபயர்ஸ்(நடப்பு நிகழ்வுகள்), சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பிரிவு பாடங்களை மெயின் தேர்வுக்கு மட்டும் என்று படிக்காமல் தொடக்கத்திலிருந்து படித்து வந்தால், நிச்சயமாக முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வில் எளிதில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம். இந்தத் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுக் கணக்காய் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 7 மாதம் கடினமாக படித்தால் கண்டிப்பாக இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
2007ஆம் ஆண்டுக்கு முன்புவரை மெயின் தேர்வு முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விருப்பப் பாடத்தில் ஒரு மாணவர் சிறந்த அறிவு பெற்றிருந்தால் போதும் இந்தத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. ஒரு மாணவர் கண்டிப்பாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், பொது அறிவு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெயின் தேர்வில் மொத்தம் 110 கேள்விகள் கேட்கப்படும். இதில் 15 மதிப்பெண்கள் கேள்விகளை 4 கேள்விகள் எழுத வேண்டியதிருக்கும். 5 மதிப்பெண்கள் கேள்விகள் 22, 3 மதிப்பெண் கேள்விகள் 20, 1 மதிப்பெண் கேள்விகள் 40 என்று மொத்தம் 88 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். மீதியுள்ள கேள்விகள் சாய்ஸ்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் வரலாறு கேள்விகளுக்கு பதிலளிக்க வெங்கடேஷன் எழுதிய சமகால இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் மெயின் தேர்வில் பதிலளிக்க எளிதாக இருக்கும். இதுதவிர பிளஸ் டூ வரலாறு புத்தகம், 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள சமூக அறிவியல் புத்தகத்தை நன்றாக படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கரண்ட் அஃபயர்ஸ், சர்வதேச நிகழ்வுகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள, தினமணி, இந்து நாளிதழ்கள், மாதந்தோறும் வரும், க்ரானிக்கல், விசார்ட், நியூ விசால் போன்ற புத்தகங்களை தேர்வு செய்து படித்தால், சர்வதேச நிகழ்வுகள் மற்றும் கரண்ட் அஃபயர்ஸ் போன்ற கேள்விகளுக்கு ஓரளவிற்கு சரியாக விடையளித்திட முடியும்.
தேசிய அளவிலான புதிய திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள, திட்டம் என்ற நூல் மாவட்ட அளவில் உள்ள மைய நூலகத்திற்கு வரும். அந்தப் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது யோஜனா என்று ஆங்கில வடிவில் வரும் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். நூலகத்திற்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவர்கள் இணையதளத்தில் வரும் இதன் பக்கங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இரண்டாம் தாளில் இந்திய அரசியல் கேள்விகளுக்கு விடையளிக்க லட்சுமிகாந்த் எழுதிய இந்தியன் பாலிட்டி ஆங்கில வழி புத்தகத்தைப் படிக்கலாம். அல்லது தமிழில் பி.ஆர். ஜெயராஜ் எழுதிய இந்திய அரசியலலைப்பு நூலை வாசிக்கலாம். அதுபோல இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பிரத்யோகிதா தர்பான் மாத இதழைப் படிக்கலாம். அல்லது டாக்டர் கலிய மூர்த்தி எழுதிய இந்தியப் பொருளாதாரம் புத்தகத்தைப் படிக்கலாம்.இந்திய புவியியல் பாடத்தைப் படிக்க 6 ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புவியியல் பாடங்களைப் படிக்கலாம். அல்லது டாடா மெக்ராகில் புத்தகத்தில் பொது அறிவுப் பகுதியில் புவியியல் பாடத்தைப் படிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்க 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகம் மற்றும், அறிவியல் குறித்த சமீபத்திய செய்திகளை ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழக நிர்வாகத்துறைக் கேள்விகளுக்கு விடையளிக்க தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (tண.ஞ்ணிதி.டிண.ஞிணிட்) உள்ள தகவல்களைத் திரட்டிப் படித்துக்கொள்ளலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள மு.வரதராசனார் எழுதிய புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
மெயின் தேர்வை பொறுத்தவரை நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். கேட்கப்பட்டிருக்கும் எல்லா கேள்விகளுமே பெரும்பாலும் தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாக் கேள்விகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதற்கு முறையான பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். எல்லாக் கேள்விகளுமே படிக்கும்போது தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், அதை எழுதிப்பார்க்கும்போது சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் நேரத்திற்குள் சொல்வதற்கு தடுமாற்றம் இருக்கும். அதனால், வீட்டில் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பாருங்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை எழுத்துப் பயிற்சி மிக அவசியம். எழுத்துப் பயிற்சி இல்லாததால், பல்வேறு மாணவர்கள் தெரிந்த கேள்விக்குக் கூட விடையளிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அதேபோல மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக தேர்வெழுதும் மாணவர்களிடைய இருக்கிறது. இது முற்றிலும் தவறு. தமிழ் வழியில் சிறப்பாக தேர்வெழுதினாலும் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். மொழியினால், மட்டும் மதிப்பெண்கள் கிடைத்துவிடாது. நாம் சொல்லும் விஷயங்கள் எந்தளவிற்கு ஆதாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்பது மட்டுமே தேர்வில் கவனிக்கப்படுகிறது என்பதை தேர்வு எழுதப்போகும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாதனையாளர் பார்த்திபன்.

பயனுள்ள முகவரி

இலவச புத்தகம்

இலவச புத்தகம்

www.books.tamilcube.com